வன்னியர்களின் மனக்காயங்களுக்கு மருந்து போடாமல் அவர்களின் மனத் தீயை அணைக்க முடியாது என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜாவுக்கு பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதம்:
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை தொடர்பாக தாங்கள் எனக்கு கடிதம் எழுதியிருந்தீர்கள். மகிழ்ச்சி. ஒடுக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இன்று தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதிகமாகப் போராடி அவர்களுக்கு சமூக நீதியை பெற்றுத் தந்ததில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு நிகராக இங்கு வேறு யாரும் இல்லை. ‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை சாதிபிரச்சினை அல்ல, அரசியல் பிரச்சினையும் அல்ல. இது ஒரு சமூகப்பிரச்சினை. இந்த பிரச்சினையில்உங்களுக்கும் திரைத்துறையினருக்கும் புரிதல் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் வகையில் வன்னியர்களுக்கு புனிதமான அக்னி குண்டத்தை வைத்து சத்ரியர் என்ற அடிக்குறிப்பு போட்டு கொலையாளிகளாகக் காண்பித்தால் அதற்குநீங்களும், திரைத்துறையினரும் ஆதரவு அளிக்கிறீர்களா? அந்தோணிசாமி என்று பெயர் வைப்பதற்கு பயந்து குருமூர்த்தி என்றுபெயர் அரசியல் செய்து, குறவர்சமுதாயத்தை இருளர் சமுதாயமாக மாற்றி, வட தமிழகத்தில் உள்ளஇரண்டு பெரிய சமுதாயத்துக்கும் சாதிக் கலவரத்தை தூண்டி பெயர் அரசியல் செய்தது திரையுலகம் தானே தவிர, அந்த இரண்டு சமுதாயங்கள் அல்ல.
கொலை செய்யப்பட்டவரோ, கொலை செய்தவரோ, கொலை செய்யப்பட்டவருக்காக வழக்காடியவரோ வன்னியர் அல்ல என்றுஉண்மை நிலவரம் இருக்கும்போது, எதற்கு வன்னியரின் சின்னமான அக்னி குண்டத்தை கொலையாளியின் வீட்டில் மாட்டி வைத்தீர்கள் என்ற நியாயமான கேள்வி கூடவா உங்கள் மனங்களில் எழவில்லை.
சுட்டிக்காட்டிய உடன் அந்த காட்சி நீக்கப்பட்டு விட்டது என்று சப்பை கட்டு கட்டலாம். ஆனால் ஏன் அந்த அக்னி குண்டத்தை அங்குவைத்தீர்கள் என்ற கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை. இதைநான் சுட்டிக்காட்டிய போது, வன்னிய மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக படக்குழுவினர் வருத்தம் தெரிவித்திருந்தால், இந்த விவகாரம் அன்றே முடிவுக்கு வந்திருக்கும்.
வன்னியர்களின் மனக்காயங்களுக்கு மருந்து போடாமல் அவர்களின் மனத் தீயை அணைக்க முடியாது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எங்கள் கைகளில் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.