நாடாளுமன்ற திமுக உறுப்பினர்களின் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை நடக்கிறது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்றுவெளியிட்ட அறிவிப்பில், ‘நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை திமுக உறுப்பினர்களின் கூட்டம், கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நவ.21-ம் தேதி (நாளை)காலை 10.30 மணிக்கு சென்னைஅண்ணா அறிவாலயத்தில் உள்ளமுரசொலி மாறன் அரங்கில் நடைபெறும். அதில் நாடாளுமன்ற திமுகஉறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவ.29-ல் தொடங்கி டிச.23-ம் தேதி வரை நடக்கஉள்ளது. இந்நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடப்பது குறிப்பிடத்தக்கது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நிலையில், இதற்கான நடவடிக்கையை நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியுரிமை சட்டத்தையும் திரும்பபெற வேண்டும் என்று அவர்வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திமுக எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் ஆலோசனை வழங்குவார் என்று கூறப்படுகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதாவுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவது, வெள்ள நிவாரணம் உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.