தமிழகம் முழுவதும் 6,042 பாசனக்குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதுதொடர்பாக நீர்வளஆதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் மொத்தம் 14 ஆயிரத்து 138 பாசனக் குளங்கள் உள்ளன. இவற்றில் நேற்றைய நிலவரப்படி 6,042 குளங்கள் முழுமையாக நிரம்பிவிட்டன. மேலும், 3,120 குளங்களில் 76 சதவீதத்தில் இருந்து 99 சதவீதம் வரையிலும், 1,926 குளங்களில் 51 சதவீதத்தில் இருந்து 75 சதவீதம் வரையிலும், 1,565 குளங்களில் 26 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரையிலும், 1,254 குளங்களில் ஒரு சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் வரையிலும் நீர்இருப்பு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 564 பாசனக் குளங்களில் 480 நிரம்பியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் 228-ல் 162 குளங்களும், காஞ்சிபுரம்மாவட்டத்தில் 381-ல் 267, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 335-ல் 195,ராணிப்பேட்டை மாவட்டத்தில் 369-ல் 221, தென்காசி மாவட்டத்தில் 543-ல் 385, தஞ்சாவூர் மாவட்டத்தில் 640-ல் 441, தூத்துக்குடி மாவட்டத்தில் 228-ல் 121, திருநெல்வேலி மாவட்டத்தில் 781-ல் 263, திருவள்ளூர் மாவட்டத்தில் 578-ல் 372, திருவண்ணாமலை மாவட்டத்தில்697-ல் 447, வேலூர் மாவட்டத்தில்101-ல் 68, விழுப்புரம் மாவட்டத்தில் 507-ல் 390 குளங்களும் முழுமையாக நிரம்பியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2040-ல் 689 குளங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 1,340 குளங்கள் உள்ள மதுரை மாவட்டத்தில் 587குளங்களும், 1,131 குளங்கள் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் 323 குளங்களும், 1,460 குளங்கள் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் 157 குளங்களும் நிரம்பின.