தனியார் பள்ளிகளுக்கு இனிமேல்நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், ‘‘தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. அனைத்துவித தனியார் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை பொறுத்து இனிமேல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும்.
அதன்பின் பள்ளிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். அதேபோல், ஏற்கெனவே நிரந்தர அங்கீகாரம் பெற்றபள்ளிகளும் தேவையான சான்றிதழ்களை சமர்ப்பித்து அங்கீகாரத்தை தக்கவைத்து கொள்ளவேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.