தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 9-ம் கட்ட மெகா முகாம் மூலம் 8 லட்சத்து 36 ஆயிரத்து 796 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 9-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று மழை பெய்ததால், மக்கள் வருகை சற்றுகுறைவாக இருந்தது. மதியத்துக்கு பிறகு ஓரளவுக்கு மக்கள் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வர் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுமருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியஇடங்களில் 8 மெகா முகாம்கள் நடத்தப்பட்டு, 9-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழை காரணமாக 23 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்த போதிலும், இந்த மெகா முகாம்களில் முதல் தவணையாக 3.36 லட்சம் பேர், இரண்டாவது தவணையாக 5 லட்சம் பேர் என மொத்தம் 8 லட்சத்து 36 ஆயிரத்து 796 பேருக்குதடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
775 பேருக்கு கரோனா
தமிழகத்தில் நேற்று 464 ஆண்கள், 311 பெண்கள் என மொத்தம் 775 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 126, கோயம்புத்தூரில் 112 பேருக்குதொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 17 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 26 லட்சத்து 72 ஆயிரத்து 564 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 896 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 9,078 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று 12 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 336 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.