திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை ஆணையருமான ஜெ.ஜெயகாந்தன் நேற்று ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆணையர் ஜெயகாந்தன், வடகிழக்குப் பருவமழையால் மாவட்டத்தில் நேரிட்டுள்ள பாதிப்புகள், மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள், மக்களைத் தங்கவைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மையங்கள், பயிர்ச் சேத விவரம், ஆறு மற்றும் வாய்க்கால்களில் நிரந்தரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், மக்களுக்கான சுகாதார நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, உரிய அறிவுரைகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, கோரையாற்றில் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், எடமலைப்பட்டிப்புதூர் அருகே கோரையாற்றின் கரையில் உள்ள ராஜீவ்காந்தி நகர், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வுகளின்போது மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், மாநகராட்சி செயற்பொறியாளர் சிவபாதம், நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளர்கள் சரவணன், மணிமோகன், உதவிச் செயற்பொறியாளர்கள் தயாளகுமார், ஜெயராமன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.