திருப்பத்தூர் நகராட்சி நிர் வாகத்தைக் கண்டித்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் நகராட்சி 29-வது வார்டு கலைஞர் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு பல மாதங்களாக கால்வாய் துார்வாரப்படாமல் இருப்பதால், அப்பகுதியில் மழைக்காலங்களில் கழிவு நீருடன் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம், ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம் என பல இடங்களில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து பெய்த கனமழையால் அப்பகுதி யில் உள்ள வீடுகளில் கழிவுநீரோடு மழைநீர் புகுந்ததாகக் கூறி 50-க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி நிர்வாகம் உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதேபோல, ஆரிப் நகரில் கழிவுநீருடன், மழைநீர் கலந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் சென்றதை தொடர்ந்து அங்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று ஆய்வு செய்து மழைநீர் வடிய தேவையான நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.