தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையின்போது, சென்னையில் கண்காணிப்பு பணிக்காக நடமாடும்ட்ரோன் காவல் பிரிவு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி, சென்னையில் கூட்டமான இடங்களையும், நீண்டசாலைகளையும் கண்காணிப்பதற்காக ரூ.3.60 கோடியில் ட்ரோன் காவல் அலகு ஏற்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை வழங்கி, தமிழக அரசு நேற்று ஆணை பிறப்பித்துள்ளது.
அதில், “சென்னை நகரில் பாதுகாப்புப் பணியில் போலீஸாருக்கு உதவும் வகையில் நடமாடும் ட்ரோன் காவல் பிரிவு செயல்படுத்தப்படுகிறது.
தற்போது 3 வகையான நடமாடும் ட்ரோன் காவல் பிரிவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாடு அறையுடன் செயல்படும் இந்த யூனிட்டுகள் 40 அடி அகலம், 10 அடி உயரத்தில் இருக்கும். அங்கிருந்தபடி ட்ரோன்களை பறக்கவிட்டு கண்காணிக்கப்படும். ஒவ்வொரு யூனிட்டிலும் 9 ட்ரோன்கள் இருக்கும். மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பாண்டி பஜார் ஆகிய இடங்களில் நடமாடும் ட்ரோன் காவல் பிரிவுகள் செயல்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.