சென்னையில் இன்று அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், சாலைகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 684 இடங்களில் நீர் இறைக்கும் இயந்திரங்கள், மக்களை மீட்க 49 படகுகள் ஆகியவற்றை நிறுத்தி, மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில், கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட 138-வது வார்டு, அசோக் பில்லர் பிரதான சாலையில் உள்ள குறுக்குப் பாலம் மற்றும் மழைநீர் வடிகாலில் மழையால் ஏற்பட்ட அடைப்புகளைச் சீர்செய்யும் பணி, 132-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் வண்டல்களைத் தூர்வாரும் பணிகள் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த வாரம் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் தேங்கிக் கிடந்த திடக்கழிவுகள், வண்டல்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற மாநகராட்சி சார்பில் தீவிர தூய்மைப் பணி 12-ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன்மூலம் தினமும் சுமார் 5,700 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மழைநீர் தேங்கிய இடங்களில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் வண்டல் வடிகட்டி தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த வார மழையின்போது, மழைநீர் தேங்கிய இடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகராட்சியின் 448 நீர் இறைக்கும் இயந்திரங்கள், வாடகைக்கு பெறப்பட்ட 199 நீர் இறைக்கும் இயந்திரங்கள், பிற துறைகளிலிருந்து பெறப்பட்ட 37 நீர் இறைக்கும் இயந்திரங்கள் என மொத்தம் 684 நீர் இறைக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 100-க்கும் அதிகமான குதிரைத் திறன் கொண்ட 22 இயந்திரங்களும், 50-க்கும் அதிகமான குதிரைத் திறன் கொண்ட 28 இயந்திரங்களும் அடங்கும். மேலும், தாழ்வான பகுதிகள் மற்றும் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 48 படகுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமைப் பொறியாளர் எஸ்.ராஜேந்திரன், மேற்பார்வை பொறியாளர் ஜி.வீரப்பன், மண்டல அலுவலர் ஜெய்பீம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.