புதுக்கோட்டையில் கோயில் பூசாரி கொலை வழக்கை காவல் துறையின் மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவு போலீஸார் விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த வில்லாயி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
என் கணவர் கருப்பையா, புதுக்கோட்டையில் உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக இருந்தார். விபூதி கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எனது கணவரை வேறு சமூகத்தைச் சேர்ந்த சிலர் கடுமையாக தாக்கினர். அதன் பின் கடந்த ஆக.14-ம் தேதி இரவு 8 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற என் கணவர் மறுநாள் அதிகாலையில் ரத்த காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
ஜாதி பாகுபாடு காரணமாக என் கணவரை கொலை செய்து சடலத்தை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். ஆனால் போலீஸார் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, என் கணவர் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்யவும், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கருப்பையா உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கின் விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கீழ் செயல்படும் காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூக நீதிப்பிரிவு போலீஸார் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.