Regional01

பணி செய்யவிடாமல் தடுத்ததாக - ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேர் கைது :

செய்திப்பிரிவு

அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் உட்பட 4 பேரை காவல் துறை யினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட குரும்பேரி ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பியது. இதிலிருந்து வெளியேறிவரும் உபரி நீரானது, வீணாக சென்று கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாற்றில் கலக் கிறது.

எனவே, உபரியாக செல்லும் மழைநீரை அருகேயுள்ள விஷமங்கலம் ஏரிக்கும் கொண்டு செல்ல வேண்டும் என பொது மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, குரும்பேரியில் இருந்து கால் வாய் வெட்டி அதன் மூலம் உபரி நீர் கொண்டு செல்ல ஆட்சியர் அமர்குஷ்வாஹா பொதுப்பணித்துறையினருக்கு உத்தர விட்டார். அதற்கான பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. இதையறிந்த குரும்பேரி ஊராட்சியைச் சேர்ந்த பொது மக்கள், விஷமங்கலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

குரும்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ராமன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குரும்பேரி - திருப்பத்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

இதையறிந்த திருப்பத்தூர் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பிறகு, அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஊராட்சி மன்ற தலைவர் ராமன், துணைத்தலைவர் பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT