TNadu

திரைத்துறையை அதன் இயல்பில் இயங்கவிடுங்கள் : அன்புமணிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம்

செய்திப்பிரிவு

திரைத்துறையை அதன் இயல்பில் இயங்கவிட வேண்டும் என தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூகநீதி போன்றவற்றை யாரும்பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று திரைப் பதிவாக்கம் செய்த உரிமையில் உங்களுக்கு எழுதுகிறேன். திரைத்துறை என்பது எல்லாவற்றையும் பேசக்கூடியது. கல்வி, காதல், மோகம், சரி, தவறு,சமூக சீர்திருத்தம் - இப்படி மனித வர்க்கம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளையும் படம்பிடித்து மக்களிடமே முன்வைக்கும் இயங்குதளம்.

பல சமூக, அரசியல் மாற்றங்களின் பங்களிப்பாக சினிமா இருந்திருக்கிறது. பல வாழ்க்கைப் படைப்புகள் நம் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அது மக்கள் முன்னிலையில் வைக்கப்படும்போது அதை வரவேற்றோ, புறந்தள்ளியோ வருகின்றனர். அப்படி ஒரு படைப்பாக வரவேற்கப்பட்டதே ‘ஜெய்பீம்’.

கடந்தகால சம்பவங்களை படமாக்கும்போது, அதை படமாகப் பார்த்துவிட்டு, சமூக மாற்றத்துக்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அதில் குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும்.

அன்று எனது ‘வேதம் புதிது' படத்தை முடக்க முயற்சித்தபோது எம்ஜிஆர் உடன் நின்றார்.

சூர்யா யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவர் அல்ல.அவரை ஒரு சமூகத்துக்கு எதிரானவராக சித்தரிப்பதும், அவர் மீதானவன்மத்தையும், வன்முறையை ஏவிவிடுவதும் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.

சினிமாவைவிட இங்கு கவனம்செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள்இங்கு வரவேண்டாமே. மக்களுக்கான இடஒதுக்கீடு பிரச்சினைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்கள் குரல் ஒலிக்கட்டும். திரைத் துறையை விட்டு விடுங்கள்.

யாருக்கு பயந்து படம் எடுக்க வேண்டும் என தெரியவில்லை. இப்படியே போனால் ஒவ்வொருஅரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதைசொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வம்படியாக திணித்தோ, திரித்தோ அந்தபடத்தில் எந்த கருத்துருவாக்கமும் செய்யவில்லை.

நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. திரைத் துறையைஅதன் இயல்பில் இயங்கவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT