Regional01

மழைக்காலத்தில் மின் விபத்துகளை தடுப்பதற்காக - சென்னையில் 20 ஆயிரம் மின் விநியோகப் பெட்டிகள் :

செய்திப்பிரிவு

சென்னை நகரில் உள்ள வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு மின் விநியோகம் செய்வதற்காக பில்லர் பாக்ஸ்கள் எனப்படும் 85 ஆயிரம் மின் விநியோகப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் இரண்டு பக்கமும் திறக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இரும்பால் செய்யப்பட்ட இப்பெட்டிகள் பொருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இதனால், இவை துருப்பிடித்து சேதமடைந்துள்ளன. மேலும், சமூக விரோதிகள் சிலர் இப்பெட்டிகளின் கதவுகளை உடைத்து, திருடிச் சென்று விட்டனர்.

பல பெட்டிகளில் கதவுகள் இல்லாமல் இருப்பதுடன், சிலர் அந்தப் பெட்டிகளில் இருந்து மின்சாரத்தையும் திருடுகின்றனர். அத்துடன், பெட்டியில் இருந்து மின்சாரம் செல்லும் வயர்கள் வெளியில் தெரிவதால், மழையின்போது தண்ணீரில் மூழ்கி மின்கசிவு ஏற்பட்டு, விபத்தும் நேரிடுகிறது.

இதை தடுக்கும் வகையில், புதிய வகை மின் விநியோகப் பெட்டிகளை பொருத்த மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இப்பெட்டியில் ஒரு பக்கம் மட்டுமே கதவுகள் பொருத்தப்பட்டிருக்கும். இதனால், மின்வாரிய ஊழியர்கள் மட்டுமே இப்பெட்டிகளைத் திறக்க முடியும். அத்துடன், அதிக வெப்பம் தாங்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, 20 ஆயிரம் நவீனரக மின் விநியோகப் பெட்டிகளை வாங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT