Regional01

காங்கிரஸ் மூத்த தலைவர் விநாயகமூர்த்தி காலமானார் :

செய்திப்பிரிவு

காங்கிரஸ் கட்சியின் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான எஸ்.ஜி.விநாயகமூர்த்தி(92) நேற்று காலமானார். வயது முதிர்வால் சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், சென்னை முகப்பேர் அடுத்த நொளம்பூரில் பேரனின் இல்லத்தில் வசித்து வந்தார்.

அவரது உடலுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திமுக எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அம்பத்தூர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த செவலூர் கிராமத்தைப் பூர்வீகமாக கொண்ட விநாயகமூர்த்தி, சென்னை வண்ணாரப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலேயே காங்கிரஸில் இணைந்த அவர் 1952-ல் நடந்த முதலாவது பொதுத்தேர்தல் முதல் அரசியல் களத்தில் இருந்தவர்.

மாநகராட்சி மன்ற உறுப்பினராக 3 முறை இருந்த இவர், காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மூப்பனார் தொடங்கிய தமாகாவில் பொதுச் செயலராகப் பதவி வகித்த இவர், 2001-ல் சென்னை பூங்கா நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் வென்றார். இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

அவரது விருப்பப்படி கண்கள் தானமாக வழங்கப்பட்டதாக, அவரது பேரன் கார்த்திகேயன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் தெரிவித்தார். விநாயகமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT