Regional02

ஏரோநாட்டிகல் பொறியியல் பட்டம் படித்ததாக கூறி - 33 வயது பெண்ணை ஏமாற்றி நகை, பணம் பறிப்பு : பெருமாநல்லூரில் பரோட்டா மாஸ்டர் கைது

செய்திப்பிரிவு

ஏரோநாட்டிகல் பொறியியல் பட்டம் படித்ததாக கூறி 33 வயது பெண்ணைஏமாற்றி நகை, பணம் பறிப்பில் ஈடுபட்ட, பெருமாநல்லூர் பரோட்டா மாஸ்டரை போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில்வீதியைச் சேர்ந்தவர் கண்ணன் (47). திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், குன்னத்தூர் தபால் அலுவலகம் வீதியில் தங்கி, பெருமாநல்லூர் பசுமை நகர் பகுதியில் உள்ள ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத முதுநிலை பட்டதாரியான 33 வயது பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் அந்தபெண்ணிடம், ‘எனக்கு திருமணம்ஆகவில்லை. ஏரோநாட்டிகல் பொறியியல் பட்டம் படித்துள்ளேன். கோவை விமான நிலையத்தில் வேலை கிடைத்துள்ளது. முன்பணம் கட்டினால் வேலை கிடைத்துவிடும், வேலை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று கூறி அப்பெண்ணிடம் 22 1/2 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணத்தை சிறிது, சிறிதாக வாங்கியுள்ளார். இந்த நிலையில், கண்ணன் திடீரென கடையில் இருந்து தலைமறைவானார்.

இதனை அறிந்த அந்த பெண், பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள், சம்பவம் குறித்து பெருமாநல்லூர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவான கண்ணனை பெருமாநல்லூர் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 16 பவுன் நகையை மீட்டனர். அவர் 3-ம் வகுப்பு மட்டுமே படித்ததும், போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

SCROLL FOR NEXT