கடந்த சில மாதங்களாக ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு தரமற்ற எம்.சாண்ட் லாரிகள் மூலம் வருகிறது. அதுமட்டுமல்லாமல், அவைஅதிக சுமையுடன் வருவதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருவதாக மணல் லாரி உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு தரமற்றஎம்.சாண்ட் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும், தமிழக ஆற்றுப்படுகைகளில் மணல் குவாரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று எம்.சாண்ட், மணல் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து எம்.சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மணல் லாரி சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி நலச் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளான யுவராஜ், ஐ.கே.எஸ்.நாராயணன் உள்ளிட்டோர் தலைமையில் 75-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கோரிக்கை முழக்கமிட்டனர்.
தொடர்ந்து, முக்கிய நிர்வாகிகள் மாவட்டஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆந்திர மாநிலத்தில் இருந்து தரமற்ற எம்.சாண்ட் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இதை சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து, கனிம வளம் மற்றும் காவல் துறையினர் சோதனை செய்யாமல் அனுமதிக்கின்றனர்.
இந்த தரமற்ற எம்.சாண்டை பயன்படுத்தி தமிழகத்தில் பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே, மாவட்ட ஆட்சியர் இதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.