பள்ளி மாணவன் உயிரிழந்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் டிஐஜி நேரில் ஆஜரானார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் சுரேஷ் என்பவர் கடந்த 1999-ம் ஆண்டு பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவத்தை மறைக்கும் வகையில் பள்ளி தலைமையாசிரியை பிரகாசி, பள்ளி ஊழியர்களான சின்னப்பன், மணிபாலன் ஆகியோரின் உதவியுடன் மாணவனின் சடலத்தை கொண்டு சென்று சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வயல் வெளியில் வீசிவிட்டனர். அப்போது பள்ளி மாணவன் சுரேஷின் உடலைக் கைப்பற்றிய ஆத்தூர் போலீஸார் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் போலீஸார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறி சுரேஷின் தந்தை பாவாடை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சுரேஷ் உயிரிழந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு சிபிசிஐடி எஸ்பியாக இருந்த ராதிகா தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். மாணவன் உயிரிழந்த சம்பவத்தை மறைத்த தனியார் பள்ளி தலைமையாசிரியை பிரகாசி, பள்ளி ஊழியர்கள் சின்னப்பன், மணிபாலன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் பள்ளி ஊழியர்களான சின்னப்பன், மணிபாலன் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை பிரகாசி மீதான வழக்கு விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இவ்வழக்கில் விசாரணை அலுவலராக இருந்து தற்போது காவல் துறை தலைமையிடத்து டிஐஜியாக உள்ள ராதிகா நேரில் ஆஜராகி 2 மணி நேரத்திற்கும் மேலாக சாட்சியம் அளித்தார். அப்போது டிஐஜி ராதிகா அளித்த சாட்சியங்களை பதிவு செய்த நடுவர் கோபிநாதன் வழக்கை வருகிற 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.