படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்தபோது மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொம்புத்துறை மீனவர் மார்ட்டினை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார். 
Regional02

நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீட்கப்பட்ட - கொம்புத்துறை மீனவருக்கு அமைச்சர் ஆறுதல் :

செய்திப்பிரிவு

காயல்பட்டினம் அருகே உள்ள கொம்புத்துறையைச் சேர்ந்த மீனவர்கள் மார்ட்டின்(50), பிலேந்திரன்(60) ஆகியோர் பைபர் படகில் நேற்றுமுன்தினம் அதிகாலை 4 மணிக்குமீன்பிடிக்க சென்றனர். கொம்புதுறையிலிருந்து 16 கடல் மைல்தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, திடீரென வீசிய பலத்த காற்றில் பைபர் படகு கவிழ்ந்தது. இருவரும் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர்.

அப்போது, அருகே மற்றொரு படகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மார்ட்டினை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பிலேந்திரனை கொம்புத்துறை மீனவர்களும், கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரும் தேடி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மார்ட்டினை தமிழக மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதேபோல, மாயமான பிலேந்திரன் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அமைச்சர் கூறும்போது, “நடுக்கடலில் மாயமான மீனவர் பிலேந்திரனை தேடும் பணி நடைபெற்று வருகிறது. முதல்வரின் அறிவுறுத்தல் படி, மாயமான மீனவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம், சிகிச்சை பெற்று வரும் மீனவரின் குடும்பத்துக்கு ரூ.50,000 வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

ஆட்சியர் கி.செந்தில்ராஜ், சண்முகையா எம்எல்ஏ உடனிருந் தனர்.

SCROLL FOR NEXT