பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவாக பொய்யான அலையை உருவாக்க ஊடகங்கள் முயற்சி செய்து வருகின்றன என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அவர் லக்னோவில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “நரேந்திர மோடி ஊடகங்களை வசியப்படுத்தி வைத்துள்ளார். அவை மோடிக்கு ஆதரவாக பொய்யான அலையை உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. பிரபல ஜோதிடர்கள் சிலரும் பாஜகவுக்கு சாதகமான அலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் உள்பட நாடு முழுவதும் 6-வது கட்ட தேர்தல் நடைபெறும் நாளில், வாரணாசியில் மோடி வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சிக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தந்தது ஒருதலைப்பட்சமானது. இது சரியல்ல. இதனை தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும். இதில் பொதுநோக்கம் எதுவும் இல்லை என்பதால் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மோடி வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளில் கூடிய மக்கள், வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்று எனக்கு தகவல் கிடைத்துள்ளது. பூர்வாஞ்சல் பகுதியில் அதிக பலனடையவேண்டும் என்ற நோக்கத்தில் இவர்களை உள்ளூர் மக்கள் என்று பாஜகவினர் கூறு கின்றனர். இதனால் அவர்கள் எந்தப் பலனும் அடையப்போவதில்லை.
பெரும் முதலாளிகளின் நிதிய ளிப்புடன் ஊடகங்களை கட்டாயப் படுத்தி, பாஜகவுக்கு சாதகமான அலையை ஏற்படுத்த முயற்சிக் கின்றனர். ஆனால் நிஜத்தில் அப்படி எந்த அலையையும் காண முடியவில்லை.
இவர்கள் ஆட்சிக்கு வந்தால் முதலாளிகளுக்கு சாதகமான கொள்கைகளையே கடைபிடிப் பார்கள். எனவே மக்கள் நன்கு யோசித்து வாக்களிக்க வேண்டும். இல்லையேல் நாடு பின்னுக்குத் தள்ளப்படும்.
பாஜகவும் சமாஜ்வாதி கட்சியும் தங்களின் ஆதாயத்துக்காக வாக்கா ளர்களை ஜாதி, மத அடிப்படையில் பிளவுபடுத்தி வருகின்றன. கிழக்கு உ.பி.யில் உள்ள கோயில்கள் மற்றும் மசூதிகளுக்கு பாது காப்பு அளிக்கப்படவேண்டும். இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.