Regional03

மழைநீர் தேங்கும் பகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் : வீட்டுவசதித்துறை அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னையில் மழைநீர் தேங்கி நிற்கும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகள், இதற்கு முன்பு எவ்வகையான பயன்பாட்டில் இருந்தது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் பூங்கா சீரமைப்புப் பணிகளை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ‘சென்னையில் பெய்த பெரு மழையின் காரணமாக வெள்ள நீர் வடியாமல் உள்ளதற்கு குளம், ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் காரணமா’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி, தமிழகம் முழுவதும் வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு சட்டத்துக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய மழையில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள், முன்பு என்ன வகை பயன்பாட்டில் இருந்தது என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இதனைத் தொடர்ந்து பெருந்துறையில் நடந்த நிகழ்ச்சியில், 330 பயனாளிகளுக்கு ரூ.39.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT