தருமபுரி: தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அணை நீரேற்றும் திட்டத்தை நிறைவேற்ற கொங்கு மக்கள் முன்னணி கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
தருமபுரி மாவட்ட கொங்கு மக்கள் முன்னணி கட்சியின் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இக்கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கூட்டத்தில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வாணியாறு அணைப் பகுதியை சுற்றுலாத் தலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மாவட்டத்தின் முக்கிய ஆன்மிக தலமான தீர்த்தமலையை பாதுகாக்கப்பட்ட சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். கே.ஈச்சம்பாடியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள அணையில் இருந்து நீரேற்றும் திட்டம் மூலம் மொரப்பூர், அரூர், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை நிறைக்கும் திட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான தீரன் சின்னமலையின் சிலையை பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரேம்குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் அஜீத், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வெற்றிசெல்வன், நிர்வாகிகள் சுகவனேஸ்வரன், தமிழ்வாணன், அருண்செல்வன், சக்திவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.