Regional02

இந்திய கம்யூ. பிரமுகர் கொலை சம்பவம் - சமூக வலைதளங்களில் பரவும் சிசிடிவி கேமரா பதிவுகள் :

செய்திப்பிரிவு

நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கொலை சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமரா பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் நடேச.தமிழார்வன் நேற்று முன்தினம் மாலை நீடாமங்கலம் கடைவீதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதில், நீடாமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்பு நடேச.தமிழார்வனின் கார் வந்து நிற்கிறது. அப்போது காரை பின்தொடர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், தமிழார்வனின் காரை கடந்து செல்கின்றனர். அவர்கள் மூவரும் மாஸ்க் அணிந்துள்ளனர். அவர்கள் தமிழார்வனின் காருக்குள் பார்த்தபடியே செல்கின்றனர்.

அதன்பின், கார் கதவை திறந்துகொண்டு தமிழார்வன் காரைவிட்டு இறங்கி நடந்து செல்கிறார். அப்போது, அங்கு மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் அரிவாளை எடுத்துக் கொண்டு வேகமாக தமிழார்வனை துரத்திக் கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அதேபோல, மற்றொரு சிசிடிவி கேமரா பதிவில், நடேச.தமிழார்வனை கொலை செய்த பின், கொலையாளிகள் எவ்வித பதற்றமும் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.

SCROLL FOR NEXT