பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை, கடுங்குளிருக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழந்துள்ளதால் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் இயங்கி வருகின்றன. தொடர் மழையின் காரணமாக கோழி இறைச்சி நுகர்வு குறைந்து, கறிக்கோழிகள் விற்பனையாகாமல் பண்ணைகளிலேயே தேக்கமடைந்துள்ளன. இந்நிலையில், தொடர் மழையாலும், கடுங்குளிராலும் கடந்த ஓரிரு நாட்களில் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழந்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியது: தனியார் பெரு நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் கோழிக் குஞ்சுகள், தீவனங்களைப் பெற்று, எங்களின் பண்ணைகளில் இறைச்சிக்கான கறிக்கோழிகளாக வளர்த்து, அவர்களிடமே வழங்குகிறோம். 24 மணி நேரமும் கோழிகளை தொடர்ந்து கண்காணித்து வளர்த்துக் கொடுக்கும் எங்களுக்கு, அன்றைய சந்தை நிலவரம் மற்றும் கோழியின் எடைக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்து, பணம் தருவார்கள்.
இந்நிலையில், உடல்நலம் குன்றி உயிரிழந்த கோழிகளை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினர் நேரடியாக வந்து பார்த்து, இறப்புக்கான காரணம் குறித்து அறிந்து, ஒப்புதல் வழங்க வேண்டும்.
அதன்பிறகுதான் நாங்கள் வளர்த்ததற்கான தொகையை தருவார்களா, இல்லையா என்பது தெரியவரும். இதன் காரணமாக, உயிரிழந்த கோழிகளை குவியலாக பண்ணையில் வைத்து பாதுகாக்க வேண்டியுள்ளது. இதனால், பண்ணையில் எஞ்சியுள்ள அனைத்து கோழிகளும் உயிரிழக்கும் வாய்ப்பு உண்டு. எனவே, எங்களின் நிலையை கருத்தில்கொண்டு, பாதிப்பு குறித்து அதிகாரிகளைக் கொண்டு கணக்கெடுத்து, நிவாரணம் வழங்க அரசு வழிசெய்ய வேண்டும் என்றனர்.