Regional02

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி :

செய்திப்பிரிவு

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியில் 70 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதற்கான திறனாய்வு கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையினரால் நடத்தப்படும். போட்டியில் பங்கேற்பவர்கள் இயல் எண், அதிகார எண், பெயர், குறள் எண் போன்றவற்றைத் தெரிவித்து, அதற்கான திருக்குறளைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருத்தல் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்கலாம். விரும்ப்பம் உள்ள மாணவ, மாணவியர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது www.tamilvalarchithurai.com என்கிற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வரும் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

SCROLL FOR NEXT