அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், நேற்று காலை நிலவரப்படி அதிகட்சமாக ஜெயங்கொண்டத்தில் 103 மி.மீ, திருமானூரில் 70 மி.மீ, அரியலூரில் 66.2 மி.மீ, செந்துறையில் 60.8 மி.மீ, ஆண்டிமடத்தில் 48.2 மி.மீ மழை பதிவானது.
இதன் காரணமாக ஜெயங்கொண்டம் பகுதியில் நாகல்குழி, இலையூர், புதுக்குடி வழியாகச் செல்லும் காட்டோடையில் அதிக மழைநீர் பாய்ந்தோடியது. ஆனால், ஓடையில் சீமைக் கருவேல மரங்கள், நாணல்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், தண்ணீர் தடையின்றி செல்ல முடியாமல், அங்குள்ள தாழ்வான பகுதிகளை நோக்கி தண்ணீர் பாய்ந்தது.
இதில், ஜெயங்கொண்டம் நகருக்கு வெளியில் உள்ள நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பாய்ந்தோடிய தண்ணீர், அங்குள்ள குடிசைகளை சூழ்ந்தது. இதையறிந்த நகராட்சி அலுவலர்கள் உடனடியாக நரிக்குறவர்கள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடு செய்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.
இதற்கிடையே, மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 3 குடிசை வீடுகள் முற்றிலுமாகவும், 53 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதாக ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.