புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்தும் ஊருணி வறண்டு கிடக்கிறது.
திருமயம் வட்டம் அரிமளம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே செட்டிநாடு கட்டமைப்புடன் கூடிய 3 ஏக்கரிலான செட்டி ஊருணி உள்ளது. குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குடிநீருக்காக இந்த ஊருணி பயன்படுத்தப்பட்டு வந்தது.
அரிமளம் பேரூராட்சி பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், குளிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த ஊருணியானது கடந்த சில ஆண்டுகளாக முழுமையாக நிரம்பவில்லை.
இவ்வூருணிக்கு வனப்பகுதியில் இருந்து மழை நீர் வரும் வகையில் வாய்க்கால்கள் உள்ளன. ஆனால், வனத்தோட்டக் கழகத்தினர் வனப்பகுதியில் தடுப்புகளை அமைத்ததால் இந்த ஊருணி நிரம்பவில்லை என அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து அரிமளம் பசுமை மீட்புக் குழுவினர் கூறியது: அரிமளத்தில் குறைந்த அளவு மழை பெய்தாலே வனப்பகுதியில் இருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீர் மூலம் முதலில் நிரம்பும் நீர்நிலையாக செட்டி ஊருணி இருந்தது. அதன்பிறகு, வனத்துறையினர் யூக்கலிப்டஸ் காட்டின் ஓரங்களைச் சுற்றிலும் தடுப்புகளை அமைத்ததால் ஊருணிக்கு மழை நீர் வரத்து தடுக்கப்பட்டுள்ளது. தடுப்புகளை அகற்றுமாறு கோரிக்கை மனு அளித்தும், சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்தியும் தீர்வு காணமுடியவில்லை. இதனால், நிகழ் ஆண்டு இயல்பான மழை அளவைவிட கூடுதலாக மழை பெய்தும் ஊருணிக்கு தண்ணீர் வராததால் வறண்டு கிடக்கிறது. ஊரெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நிலையில், ஊரின் மையத்தில் நீரின்றி ஊருணி காணப்படுவது வேதனை அளிக்கிறது. இதனால், வழக்கம்போல கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.
எனவே, அடுத்தடுத்து பெய்யும் மழை நீராவது ஊருணிக்கு வரும் வகையில் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றித்தர வனத்துறையினருக்கு ஆட்சியர் அறிவுறுத்த வேண்டும் என்றனர்.