கடம்பூரில் பாலம் கட்டித்தரக்கோரி பள்ளிக்குழந்தைகளுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கடம்பூர் அருகே உள்ள அருகியம், மாக்கம்பாளையம் பகுதியில் பெய்த கன மழையால், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் இப்பகுதி மக்கள் வெளியிடங்களுக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தரைப்பாலத்திற்கு மாற்றாக, உயரமான பாலம் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதி இது வரை நிறைவேற்றப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த கிராம மக்கள், கடம்பூர் பேருந்து நிலையம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள், பெற்றோர் என 300-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் இளங்கோ மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பாலம் கட்டித்தர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியைத் தொடர்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.