தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடர் கால முதல் நிலை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, அவர்களது பணி விவரம் குறித்த கையேட்டை ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வழங்கினார். படம்: என்.ராஜேஷ் 
Regional01

மழைக் காலத்தில் மக்கள், அதிகாரிகளுக்கு உதவ - தயார் நிலையில் 7 ஆயிரம் தன்னார்வலர்கள் : தூத்துக்குடி மாவட்டம் முழுக்க 97 நிவாரண முகாம்கள்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மாவட்ட நிர்வாகத்துக்கு உதவ தன்னார்வலர்கள் 7,030 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பணி என்ன என்பது குறித்த கையேட்டை ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டார்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 20 சதவீதம் கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வைகுண்டம், மருதூர் அணைக்கட்டுகளைத் தாண்டி 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது. கோரம்பள்ளம் குளத்தின் உயரம் 2.4 அடி ஆகும். தற்போது 1.85 அடிதண்ணீர் நிரம்பியுள்ளது. கயத்தாறு, கடம்பூர் பகுதிகளில் மழை இல்லாததால் கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் வரத்து குறைவாகவே உள்ளது. 97 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழைக் காலத்தில் மாவட்ட நிர்வாகத்துக்கு உதவுவதற்காக முதல்நிலை பொறுப்பாளர்கள் ஒவ்வொரு வட்டத்துக்கும் 30 பேர் வீதம், மொத்தம் 1,030 பேர் தேர்வுசெய்து வைத்துள்ளோம். அவர்களுக்கு பணி தொடர்பான கையேடுகொடுத்துள்ளோம். அவசர முதலுதவி சிகிச்சை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், நேரு யுவகேந்திரா, செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 6 ஆயிரம் பேரை தேர்வுசெய்துள்ளோம். அவர்களுக்கு தாலுகா அளவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அரசின் தகவல்களை பொதுமக்களுக்கும், பொதுமக்களின் கருத்துகளை அதிகாரிகளுக்கும் தெரிவிக்க பயன்படுத்தப்படுவார்கள். குளங்கள் குறித்த நிலவரங்களையும் அரசுக்கு தெரிவிப்பார்கள்.

மழையால் பயிர்கள் சேதம் அடையவில்லை. இதுவரை 75 வீடுகள் பகுதியாகவும், 6 வீடுகள்முழுமையாகவும் என, மொத்தம் 81 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 15 கால்நடைகள் இறந்துள்ளன. மின்னல் தாக்கி 2 பேர் இறந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. உரங்கள் விற்பனையை முறைப்படுத்தும் வகையில் வில்லை (ஸ்டிக்கர்) வெளியிடப்பட்டு உள்ளது. கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்டால் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர்.

SCROLL FOR NEXT