தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் செய்தியாளர் களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 639 குளங்கள் உள்ளன. இந்த குளங் கள் அனைத்தும் கண்காணிப்பில் உள்ளன. இதில் 74 குளங்கள் 75 சதவீதத்துக்கும் அதிகமாக நிரம்பியுள்ளன.
குளங்களின் கரையில் ஏதேனும் உடைப்பு ஏற்படும் நிலை இருந்தால் உடனடியாக அதனை மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழையால் சாலைகளில் ஏற்பட்டுள்ள குழி களை சீரமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளன என்றார் ஆட்சியர்.
மழை அளவு
ராதாபுரத்தில் 9 மி.மீ. மழை பதிவு பாபநாசம் நீர்மட்டம் 136 அடி
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் ராதாபுரத்தில் 9 மி.மீ., மூலக்கரைப்பட்டியில் 8, களக்காட்டில் 5.40, அம்பாசமுத்திரத்தில் 2, திருநெல்வேலியில் 1.20, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டையில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,024 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 1,405 கனஅடி வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 136.25 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 138.29 அடியாக இருந்தது.
மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 233 கனஅடி நீர் வந்தது. 10 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 84.95 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 21.75 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 10.23 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50.50 அடியாகவும் இருந்தது.