கோவை பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் இருந்தும், சத்தியமங்கலம், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும், பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பூக்கள் வரத்து குறைந்தது. இதனால் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, ‘‘கடந்த வாரம் கிலோ ரூ.500-க்கு விற்ற மல்லிகை நேற்று ரூ. 2000-க்கும், ரூ.600-க்கு விற்ற ஜாதி மற்றும் முல்லை ரூ.1200 வரையும் விற்கப்பட்டன. அரளி கிலோ ரூ.200-க்கும், லில்லி பூ ரூ.200-க்கும், பட்டன் ரோஸ் ரூ.240-க்கும் விற்கப்பட்டது. ஆயுத பூஜைக்கு கிலோ ரூ.240 வரை விற்பனையான செவ்வந்தி பூ நேற்று வரத்து அதிகரிப்பு காரணமாக கிலோ ரூ.80- க்கு விற்பனை செய்யப்பட்டது. 15 பூக்கள் கொண்ட ரோஜா கட்டு ரூ.150-க்கும், அரைஅடி சம்பங்கி மாலை ரூ.250-க்கும், 2 அடி மாலை ரூ.400-க்கும் விற்கப்பட்டது’’ என்றனர்.