கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸை தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில் பிக்கட்டி, கைகாட்டி, மற்றும் மஞ்சூர் பகுதிகளில் உள்ள மூன்று கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் மட்டும் 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள், தங்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை சாலிஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் தொழிற்சாலை முன்பாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலை நிர்வாகம் தொழிற்சாலைக்கு விடுமுறை அறிவித்ததால் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
போனஸ் தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிற்சாலை நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘அரசு அறிவித்த 10 சதவீத போனஸ் தொகையை அனைத்து தொழிற்சாலைகளிலும் ஒரே மாதிரியாக வழங்காமல் ஒரு சில தொழிற்சாலைகள் அதிகமாக வழங்கியுள்ளன. இதனால் தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். இப்பிரச்சனை தொடர்பாக வரும் 11-ம் தேதி குன்னூரில் தொழிலாளர் நல ஆணையர் முன்பாக நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது’’ என்றனர்.