வனத்துக்குள் தங்கி கால்நடைகளை மேய்க்க வனத்துறை மூலம் அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும், இதை மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தருமபுரி மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் கேவிஏ.நாயுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்டம் மொத்தம் 4 லட்சத்து 49 ஆயிரத்து 777 ஹெக்டேர் நிலப்பரப்பை கொண்ட, தமிழகத்தின் 10-வது பெரிய மாவட்டம் ஆகும். இதில், 1 லட்சத்து 64 ஆயிரத்து 903.507 ஹெக்டேர் வனப்பரப்பளவு உள்ளது. மாவட்டத்தின் மொத்த பரப்பில் 36.66 சதவீதம் வனப்பகுதி. யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடமாகவும், பல்வேறு தாவரங்கள் மற்றும் மூலிகைச் செடிகளின் இருப்பிடமாகவும் திகழ்கிறது. இப்பகுதியில் தங்கி கொட்டகை மற்றும் பட்டி அமைத்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்க அனுமதி எதுவும் வழங்கப்படுவதில்லை. மேலும், யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாடும் வனத்தில் தங்கி கால்நடைகளை மேய்க்கும்போது விலங்குகள் தாக்கி மனித உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதவிர, வனத்திலேயே தங்கி கால்நடை மேய்ப்போர் தீ மூட்டி சமையல் செய்வதால் வனத்துக்குள் தீ விபத்து ஏற்பட்டு வன விலங்குகளும், வன வளங்களும் பாதிப்படைகிறது. வனத்துக்குள் தங்கி கால்நடைகளை மேய்க்க வனத்துறையின் முறையான அனுமதியை பெற்றுத் தருவதாக சிலர் நபர்கள் வனத்தை ஒட்டிய கிராம மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நபர்களை யாரும் நம்ப வேண்டாம். வனத்துறை மூலம் இவ்வாறான அனுமதி வழங்கப்படுவதில்லை என்பதால் அத்துமீறி வனத்துக்குள் பட்டி அமைத்து கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது தமிழ்நாடு வனச் சட்டம் 1882-ன் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.