ஆந்திராவிலிருந்து ஆம்புலன்ஸில் ரூ.1 கோடி மதிப்பிலா 200 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இளைஞரை தனிப்படை போலீஸார் நாகப்பட்டினத்தில் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா மற்றும் ஆம்புலன்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக கடற்கரையோரங்களிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு ரகசியமாக கஞ்சா கடத்தி செல்வது அதிகரித்து வருகிறது. எனவே, இதை தடுக்க தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் ஆர்.மகேந்திரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் என்.கந்தசாமி, தலைமைக் காவலர்கள் கே.இளையராஜா, கே.சுந்தர்ராமன், ஆர்.விஜய் ஆகியோர் அடங்கிய தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஆந்திரா மாநிலத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் 200 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மார்ஷல் டெரன்ஸ் ராஜா(38) என்பவரை தனிப்படை போலீஸார் நாகப்பட்டினத்தில் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், அவர், ஆந்திரா மாநிலத்திலிருந்து ஆம்புலன்ஸில் 200 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, அதை நாகப்பட்டினத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ரூ.1 கோடி மதிப்பிலான 200 கிலோ கஞ்சா மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.