தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை கண்டித்து புதுச்சேரி பாமக சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாரம் அவ்வை திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு புதுச்சேரி மாநில அமைப்பாளர் தன்ராஜ் தலைமை தாங்கினார். பாமகவினர் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் திடீரென காமராஜ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. அப்போதுஅவ்வழியே வந்த திமுக கொடி பொருத்திய காரை தடுத்து நிறுத் திய பாமகவினர் காரில் இருந்த கொடியை கழற்றி சாலையில் வீசினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோரிமேடு போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி வாகனங்கள் செல்ல வழிவகை செய்தனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பாமகவினரை அமைதியான முறையில் ஆர்ப் பாட்டம் நடத்தும்படியும், மீறினால்கைது செய்வோம் எனவும் போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். இதன் பிறகு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் புதுச்சேரி வன்னியர் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியலில் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்களை திருபுவனை போலீஸார் கலைந்து போக செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில்
வடலூரில் சென்னை-கும்ப கோணம் சாலையில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பாமக மாவட்ட செயலாளர் ஜெகன், மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் காசிலிங்கம், பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், அசோக்குமார், பாமக மாவட்ட செயலாளர்கள் கோபிநாத், கார்த்திகேயன், சசிக்குமார் பாண்டியன், மாநில ஒழுங்குந டவடிக்கை குழு தலைவர் தேவதாஸ் படையாண்டவர், பாமக மாநில மகளிரணி செயலாளர் சிலம்புசெல்வி, ஒன்றிய செயலா ளர்கள் தங்கவேல், கீழக்குப்பம் செல்வக்குமார், சிவகுரு உள்ளிட்ட பலர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.