திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
அணைகளில் இருந்து தண்ணீரை திறந்துவைத்து, செய்தியாளர்களிடம் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறியதாவது:
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசன விவசாயிகளுக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் இருப்பை கருத்தில்கொண்டு தண்ணீர் திறக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் (2,260 ஏக்கர்), தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் (870 ஏக்கர்), நதியுண்ணி கால்வாய் (2,460) ஏக்கர், கன்னடியன் கால்வாய் (12,500 ஏக்கர்), கோடகன் கால்வாய் (6,000 ஏக்கர்), பாளையங் கால்வாய் (9,500 ஏக்கர்), திருநெல்வேலி கால்வாய் (6,410 ஏக்கர்) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மருதூர் மேலக்கால் கால்வாய் (12,762 ஏக்கர்), மருதூர் கீழக்கால் கால்வாய் (7,785 ஏக்கர்), தெற்கு பிரதானக்கால்வாய் (12,760 ஏக்கர்) மற்றும் வடக்கு பிரதான கால்வாய் (12,800 ஏக்கர்) ஆகியவற்றின் கீழுள்ள மொத்தம் 86,107 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகளுக்கு, பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
வரும் 31.03.2022 -ம் தேதி வரை 151 நாட்களுக்கு, தண்ணீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது 1,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயக் கடன் உதவிகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் சா.ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வகாப், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.