குமரி மீன்பிடி படகு மீது மோதிய பனாமா நாட்டு கப்பலை 3 வாரத்தில் பறிமுதல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
குளச்சலைச் சேர்ந்த பி.ராஜாமணி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
எனக்கு சொந்தமான படகில் 17 மீனவர்கள் அக்டோபர் 22-ம் தேதி குளச்சல் கடலில் 20 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சென்ற பனாமா நாட்டை சேர்ந்த எம்வி நவிஸ் வீனஸ் என்ற சரக்கு கப்பல் என் படகு மீது மோதிவிட்டு சென்றது. இதில் என் படகு பலத்த சேதமடைந்தது.
பனாமா நாட்டு சரக்கு கப்பல் சர்வதேச கடல் சட்ட விதிகளை மீறி இயக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குளச்சல் போலீஸில் புகார் அளித்தேன். போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த கப்பல் மும்பை துறைமுகத்தில் உள்ளது. கப்பலை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி பிறப்பித்த உத்தரவு: குளச்சல் கடல் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அது உயர் நீதிமன்றக் கிளை எல்லைக்கு உட்பட்ட பகுதியாக இருப்பதால், இந்த வழக்கை இந்த நீதிமன்றத்தில் விசாரிக்க முகாந்திரம் உள்ளது. பனாமா கப்பலை பறிமுதல் செய்யாவிட்டால் அந்த கப்பல் இந்திய எல்லையை கடந்து செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே பனாமா நாட்டு கப்பலை 3 வாரத்தில் பறிமுதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.