தலைவாசல் அடுத்த காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் சேகோ ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட ரசாயனப் பொருட்களை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் பார்வையிட்டார். 
Regional02

தலைவாசல் அருகே ரசாயனங்கள் கலப்பதாக புகார் - தனியார் சேகோ ஆலையில் சோதனை: 14,500 கிலோ ஜவ்வரிசி பறிமுதல் :

செய்திப்பிரிவு

தலைவாசல் அருகே தனியார் சேகோ ஆலையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

இதில், 400 கிலோ பிளீச்சிங் பவுடர், 300 கிலோ ஹைட்ரஜன் பெராக்சைடு, 9,000 கிலோ ஸ்டார்ச் மாவு, 14,500 கிலோ ஜவ்வரிசி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர் .

தலைவாசல் அடுத்த காட்டுக்கோட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான சேகோ ஆலையில் அனுமதிக்கப்படாத ரசாயனங்களைப் பயன்படுத்தி ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு ஆகியவை உற்பத்தி செய்யப்படுவதாக, உணவுப் பாதுகாப்புத்துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ரமேஷ், கண்ணன், ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த சேகோ ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில், ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உள்ளிட்டவற்றை வெண்மையாக உற்பத்தி செய்ய அரசு அனுமதிக்காத ரசாயனங்களை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 300 கிலோ ஹைட்ரஜன் பெராக்சைடு, 400 கிலோ பிளீச்சிங் பவுடர், 210 கிலோ பாஸ்போரிக் ஆசிட், 105 கிலோ ஃபார்மிக் அமிலம், 9,000 கிலோ உலர் ஸ்டார்ச் மாவு, 14,500 கிலோ ஜவ்வரிசி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

உற்பத்தி செய்யப்பட்ட ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு ஆகியவற்றை பரிசோதனைக்காக மாதிரி எடுத்துள்ளனர். பரிசோதனை அறிக்கை முடிவின் அடிப்படையில் சேகோ ஆலை மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT