Regional02

பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் : அரசுக்கு மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை

செய்திப்பிரிவு

பணியிட மாற்றம் செய்யப்பட்ட கோலப்பன்சேரி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், கோலப்பன்சேரி கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ப.கமலக்கண்ணன் கடந்த 2020 அக். 9-ம் தேதி பொறுப்பேற்றார்.

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன் பொறுப்பேற்ற நாள் முதல் பள்ளியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது பள்ளி மாணவர்களின் பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:

இப்பள்ளி வளாகத்துக்கு உள்ளே போதைப் பொருட்களை சமூக விரோதிகள் சிலர் பயன்படுத்தி வந்தனர். அத்துடன், அவர்கள் பள்ளிக்கு வரும் மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசுவது மற்றும் தவறான செய்கைகள் மூலம் துன்புறுத்துவது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால், நாங்கள் எங்களுடைய பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சப்பட்டு இருந்தோம்,

இந்நிலையில், தலைமை ஆசிரியராக கமலக்கண்ணன் பொறுப்பேற்ற பிறகு இச்சூழ்நிலை மாறத் தொடங்கியது. பள்ளி பல்வேறு மாற்றங்களையும், நல்ல முன்னேற்றத்தையும் கண்டு வந்தது.

குறிப்பாக, பள்ளியில் சேதம்அடைந்த வகுப்பறைக் கட்டிடங்களை சீரமைத்தார். அதேபோல், மாணவ, மாணவியர் பயன்படுத்தும் கழிப்பறைகளை சுத்தம் செய்து, குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

மேலும், இடிந்து விழும் நிலையில் இருந்த வகுப்பறைக் கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியையும் அரசிடம் இருந்து பெற்றார். பள்ளிக்கு சுற்றுச்சுவரை கட்டினார். இதன் மூலம், வெளியாட்கள் அத்துமீறி நுழைவதைத் தடுத்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக பள்ளி பராமரிப்புக்கு வழங்கப்பட்ட அரசு நிதியை பள்ளி வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் கையாடல் செய்யப்பட்டதைக் கண்டுபிடித்தார்.

பள்ளியில் சில ஆசிரியைகள் வகுப்பறைக்குச் சென்று ஒழுங்காக மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் இருந்தனர். இதை அவர் தட்டிக் கேட்டதால், ஆசிரியைகள் சிலர் ஒன்று சேர்ந்து ஆதிதிராவிடர் நல ஆணையரிடம் சென்று அவர் தங்களை துன்புறுத்துவதாக பொய் புகார் கூறி, பணியிட மாற்றம் செய்ய வைத்துள்ளனர்.

எனவே, இப்பள்ளியின் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும், பள்ளியின் வளர்ச்சிக்கும் வேண்டி பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் கமலக்கண்ணனை மீண்டும் இதே பள்ளியில் பணி அமர்த்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மாணவர்களின் பெற்றோர் கூறினர்.

SCROLL FOR NEXT