சரவெடிகளை விற்பதற்கும் வெடிப்பதற்கும் பேரியம் ரசாயனத்தால் தயாரிக்கப்பட்ட அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட ரசாயனங்களால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை தயாரிக்க, விற்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்தக் கோரிபல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள்எம்.ஆர்.ஷா, போபண்ணா அமர்வு முன்புநேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சரவெடிகளால் காற்று மாசு, ஒலி மாசு, திடக்கழிவு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே அவற்றை தயாரிக்க, விற்க, வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதேபோல் பேரியம் ரசாயனத்தால் தயாரிக்கப்பட்ட அனைத்து வகையானபட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் அனுமதி வழங்கப்பட்ட பசுமைபட்டாசுகளை மட்டுமே விற்க வேண்டும். ஆன்லைனில் பட்டாசுகள் விற்கப்பட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும். பட்டாசு தயாரிப்பில் அலுமினியத்தின் பயன்பாட்டை குறைப்பது குறித்து பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு கழகம் (பிஇஎஸ்ஓ) ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
நாட்டின் எந்த பகுதியிலாவது தடைசெய்யப்பட்ட பட்டாசு தயாரிக்கப்பட்டாலோ, விற்பனை செய்யப்பட்டாலோ, பயன்படுத்தப்பட்டாலே அந்தந்த மாநிலதலைமைச் செயலாளர்கள், உள்துறைசெயலாளர்கள், காவல் துறை தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளே முழு பொறுப்பேற்க வேண்டும். பட்டாசு விவகாரத்தில் உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லையெனில்மிக தீவிர பிரச்சினையாக எடுத்து கொள்ளப்படும்.
பல பகுதிகளில் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்கப்படுவதாக சிபிஐ அறிக்கையில் கூறியுள்ளது. இத்தகைய விதிமீறல்களை ஒருபோதும் ஏற்க முடியாது. அபாயகரமான ரசாயனங்களால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மின்னணு, அச்சு ஊடகங்கள் வாயிலாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் விளம்பரம் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.