திருப்பத்தூர் மாவட்டத்தில் திறக்கப்பட உள்ள பள்ளிகளில் வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா? என்பதை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பள்ளிகள் திறப்பு தொடர்பான முன்னேற் பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஆட்சியர் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் நவ 1-ம் தேதி திறக்கப்பட உள்ள 800 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் 194 தனியார் பள்ளிகள் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பள்ளி கட்டிடங்கள் உறுதித்தன்மை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளனவா? என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப் படும் உணவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வழங்க வேண்டும். உணவுகள் தரமாக உள்ளதா? என்பதை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்சாப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.
பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். வகுப்புகள், கழிப்பறை களை சுகதாரமாக பராம ரிக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை இரண்டு முறை பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அவசியம் கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்’’ என்றார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் முனிமாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.