சேலம் சன்னியாசி குண்டு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (34). கடந்த 17-ம் தேதி லாட்டரி சீட்டு விற்றதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஆத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 26-ம் தேதி கார்த்திக்குக்கு ஜாமீன் கிடைத்தது. சிறையில் அவரை வெளியே அனுப்ப தேவையான நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென கார்த்திக் நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கார்த்திக்கை போலீஸார் கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
சேலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்துக்கு கார்த்திக் உடல் நேற்றுமுன்தினம் கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்ஸ் ஆட்சியர் அலுவலகம் அருகே வந்த போது, வண்டியை உறவினர்கள் மறித்து, கார்த்திக் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர துணை காவல் ஆணையர் மோகன்ராஜ் மற்றும் தெற்கு காவல் உதவி ஆணையர் வெங்கடேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விசாரணை நடத்துவதாக உறுதி கூறினர்.
இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து நேற்று (28-ம் தேதி) காலை ஆத்தூர் நீதிபதி ராஜராஜன் முன்னிலையில், கார்த்திக் உடலை மருத்துவர்கள் கோகுல்ரமணன், பொன்னியின்செல்வன், கார்த்திக், ரியாஸ் அகமது குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
இதையொட்டி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.