Regional01

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி - ஈரோட்டில் வார்டு வரையறை பட்டியல் தயாரிப்புப் பணி நிறைவு :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக, வார்டு வரையறை பட்டியல் தயாரிப்புப் பணி நிறைவடைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்துள்ள நிலையில்நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபி, பவானி, புன்செய் புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் நடக்கவுள்ள பகுதிகளில் வார்டு வரையறை, வார்டு விரிவாக்கம் பணிகள் ஏற்கெனவே நடந்து முடிந்துள்ளன. ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில், விரிவாக்கம், வார்டு வரையறை பணிகள் நடந்து முடிந்துள்ளன.இந்த மாற்றங்கள் தொடர்பாக சிலர் ஆட்சேபனை மனுக்களையும் மாநகராட்சியில் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சில வார்டுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நவம்பர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதும், தேர்தல் பணிகள் தீவிரமடையும் என அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT