கிருஷ்ணகிரி அருகே கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் மழைக்கு கழிவறை சுற்றுச்சுவர் இழந்து விழுந்ததால், மாணவ, மாணவிகள் அவதியுற்று வருகின்றனர். 
Regional04

கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில்கழிவறையின்றி அவதியுறும் மாணவ, மாணவிகள் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அருகே உள்ள கம்மம்பள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் மழையின்போது கழிவறை இடிந்து விழுந்ததால், மாணவ, மாணவிகள் அவதியுற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது கம்மம்பள்ளி கிராமம். இக் கிராமத்தில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கம்மம்பள்ளி, கொல்லப்பள்ளி, கெட்டூர், எலுமிச்சகிரி, மல்லி நாயனப்பள்ளி ஆகிய 5 கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

தற்போது 6 -ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை 435 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கிருஷ்ணகிரி வட்டாரத்தில் அதிகளவில் மாணவ, மாணவிகள் கொண்ட பள்ளியாக திகழ்கிறது. ஏற்கெனவே இப்பள்ளி குறைவான இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான கழிவறை சுற்றுச்சுவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைக்கு இடிந்து விழுந்தது. இதனால் கழிவறை இன்றி மாணவ, மாண விகள் அவதியுற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன்ராம் கூறும்போது, இப்பள்ளியில் ஏற்கெனவே கழிவறை பற்றாக்குறை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கூடுதல் கழிவறைகள் கட்டித் தரக்கோரி சிஇஓ, டிஇஓ உள்ளிட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கரோனா ஊரடங்கிற்கு பிறகு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. 27 சென்ட் இடத்தில் தான் வகுப்பறைகள், கணினி அறை, கழிவறை, சமையலறை உட்பட அனைத்து கட்டிடங்களும் உள்ளன.

தற்போது பெய்த மழைக்கு கழிவறை சுவர்கள் இடிந்து விழுந்து விட்டது. இதனால் மாணவ, மாணவிகள் அவதியுற்று வருகின்றனர். இது தொடர்பாக எம்எல்ஏவிடம் மனு அளித்துள்ளோம். மாணவ, மாணவிகளின் நலன் கருதி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அல்லது தன்னார்வ அமைப்புகள் கட்டித் தர முன்வர வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT