ஆரணியில் நேற்று நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு. அருகில், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உள்ளிட்டோர். 
Regional03

இல்லம் தேடி கல்வி திட்டம் - கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் : அமைச்சர் எ.வ.வேலு நம்பிக்கை

செய்திப்பிரிவு

இல்லம் தேடி கல்வி என்ற திட்டம், கிராமப்புற மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் ஆரணியில் அரசு கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். அரசு கட்டிடங்களை திறந்து வைத்தும், பல்வேறு துறைகள் சார்பில் 722 பேருக்கு ரூ.4.74 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி முக்கியம். அதற்காக, கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்காக இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டமானது மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இதேபோல், பல சிறப்பான திட்டங்களை தமிழக அரசு கொண்டு வர உள்ளது. தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார்” என்றார்.

இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், செங்கம் புதிய சந்தைமேடு பகுதி மற்றும் கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதி புதுப்பாளையம் அடுத்த காரப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற விழாவில் அரசு கட்டிடங்களை திறந்து வைத்தும் மற்றும் நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

SCROLL FOR NEXT