திருப்பூர் திலகர் நகரில் பழுதடைந்த குழாயை சரி செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் நேற்று முதலாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்காணிப்பாளர் ராஜசேகரிடம் புகார் மனு அளித்தனர். 
Regional02

பழுதடைந்த ஆழ்குழாயை சரி செய்ய கோரி - மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை :

செய்திப்பிரிவு

திருப்பூரில் பழுதடைந்த ஆழ்குழாயை சரிசெய்து உப்புத் தண்ணீர் வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் நேற்று மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் திலகர் நகர் 3-வது வீதியில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் மோட்டார் பழுது அடைந்திருப்பதால், கடந்த 15 நாட்களாக இப்பகுதி மக்களுக்கு உப்புத் தண்ணீர் விநியோகம் நடைபெறவில்லை. இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் பலமுறை தொடர்பு கொண்டு பேசியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் சாந்தி தலைமையில் வேலம்பாளையம் முதலாவது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நகரக்குழு உறுப்பினர்கள் அ.ஆறுமுகம், சின்னசாமி, நவபாலன், சாந்தி ஆகியோர் மண்டல அலுவலக கண்காணிப்பாளர் ராஜசேகரிடம் முறையிட்டனர். இதையடுத்து, குழாய் ஆய்வாளர் சண்முகம் அப்பகுதிக்கு சென்று ஆழ்குழாய் பிரச்சினையை ஆய்வு செய்து தீர்த்து வைக்க நடவடிக்கை மேற்கொண்டார். அத்துடன் திலகர் நகர் 2-வது வீதியிலும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT