பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் வழங்கப்படும் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2021-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு முதல்வரால் தேர்வு செய்யப்படும் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் விருது தொகையும், 1 பவுன் தங்க பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவதற்கு சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்டுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைப் புரிந்த தகுதியுடையவர்கள் இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடையவர்கள் தங்களது சுய விவரங்கள், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் சுய விபரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கிய விண்ணப்பத்தினை இம்மாதம் 31-ம் தேதிக்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.