காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதனால், காவிரியில் வெள்ளம் ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திடீர் திடீரென அதிகரித்து வருகிறது. இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24-ம் தேதி நீர்மட்டம் 100 அடியை எட்டியது.
இந்நிலையில், மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 21 ஆயிரத்து 390 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 27 ஆயிரத்து 251 கனஅடியாகவும், மாலை 35 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது.
நேற்று முன்தினம் 101.05 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 102.79 அடியாக உயர்ந்தது. இதனிடையே, அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 450 கனஅடி திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று 300 கனஅடியாக குறைக்கப்பட்டது. காவிரியில் விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர்இருப்பு 68.50 டிஎம்சி-யாக உள்ளது.
ஒகேனக்கல்லில் 40 ஆயிரம் கனஅடி
இதுதவிர, கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ள நிலையில் அவ்விரு அணைகளில் இருந்தும் வெளியேற்றும் உபரி நீரின் அளவையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே, ஒகேனக்கல் காவிரியில் இந்த நீர்வரத்து உயர்வு தொடர்ந்து சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.