திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது.
திருவெறும்பூரில் மலைக்கோயில் என்று அழைக்கப்படும் எறும்பீஸ்வரர் கோயிலுக்கு எதிரே தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி பல மாதங்களாக சிதலமடைந்து இருந்தது.
சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள அலங்கார மின் விளக்கு தூண் ஒன்றும் கடந்த மார்ச் மாதம் சாய்ந்து விழுந்தது. மேலும் நடைபாதை சிலாபுகள் உள்வாங்கியும், கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டும் ஆபத்தான நிலையில் இருந்தன. இவற்றை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் சரி செய்யப்படவில்லை.
இந்தநிலையில், தற்போது, தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் ஏறத்தாழ 50 அடிக்கு மேலாக சுற்றுச்சுவர் இடிந்து குளத்துக்குள் விழுந்து விட்டது.
இதுகுறித்து பன்னிரு திருமுறை வார வழிபாட்டு மன்ற ஆலோசகர் கோ.சண்முகவேல் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: இந்தக் கோயிலின் தெப்பக் குளத்தின் சுற்றுச் சுவரையொட்டியுள்ள மின்விளக்கு தூண்கள் மற்றும் அதற்கு கீழே உள்ள தளம் ஆகியவை கடந்த மார்ச் மாதம் சேதமடைந்தன. இந்தப் பகுதியில் உள்ள மின் விளக்குகளும் சரிவர எரிவதில்லை.
இந்தப் பகுதியில் உள்ள ஏராளமான குழந்தைகள் இங்கு தான் விளையாடுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக இவற்றை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் இதுவரை சரி செய்யப்படவில்லை.
இந்தநிலையில் சேதமடைந்திருந்த சுற்றுச்சுவர் இடிந்து குளத்துக்குள் விழுந்து விட்டது. இதை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.