Regional01

பள்ளி வளாகத்தை - சுத்தம் செய்வதற்கு மாணவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை : மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வதற்கு மாணவர்களை பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

நவ.1-ம் தேதியன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சுத்தம் செய்யும் பணியை நேற்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் சாமி.சத்தியமூர்த்தி கூறியது: மாவட்டத்தில் உள்ள 1,200 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். நவ.1-ம் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளி வளாகங்கள் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மாணவர்களின் பெற்றோர் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 100 சதவீதம் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்றார்.

SCROLL FOR NEXT