தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர் அருகே பாதைக்காக மண்ணை தோண்டியபோது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அங்கு அகழாய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசுதேவநல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் கிராமத்தில் குலசேகரப்பேரி கண்மாய் கரை அருகில் எஸ்.தங்கப்பழம் கல்விக்குழும நிறுவனர் எஸ்.தங்கப்பழம் என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இதில் பாதை அமைப்பதற்காக மண் தோண்டும் பணி நடந்தது. சுமார் 4 அடி ஆழத்துக்கு உருளைக் கற்களாக கிடந்ததால் மேலும் சிறிது தோண்டியுள்ளனர்.
அப்போது, மண்ணில் புதைந்து கிடந்த பழங்கால மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழிகள், இரும்பால் செய்யப்பட்ட வில், குத்தீட்டி, வாள், கத்தி மற்றும் செப்பு பாத்திரங்கள் என 40-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் அங்கு வந்து பழங்காலப் பொருட்களை பார்வையிட்டு, அவற்றின் தொன்மை குறித்து ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து குற்றாலம் அகழ் வைப்பக தொல்லியல் அலுவலர் அரி கோபாலகிருஷ்ணன் கூறும்போது, “வாசுதேவநல்லூர் அருகே கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கலாம். இப்பொருட்களை பாதுகாத்து வைக்க குற்றாலம் அகழ் வைப்பகத்தில் போதிய இடம் இல்லாததால், தங்கப்பழம் பொறுப்பிலேயே பொருட்களை பாதுகாத்து வைக்குமாறு கூறியுள் ளோம்.
பொக்லைன் மூலம் தோண்டி னால் பொருட்கள் சேதமடையும் என்பதால், மேற்கொண்டு இந்த இடத்தில் தோண்ட வேண்டாம் என்று கூறியுள்ளோம். அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டு, அகழாய்வு செய்வது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.
குறைந்த பரப்பளவில் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இப்பகுதியில் அகழாய்வு செய்தால் மேலும் பல வரலாற்று தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இங்கு விரிவாக அகழாய்வு செய்ய தொல்லியல் துறையும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொக்லைன் மூலம் தோண்டினால் பொருட்கள் சேதமடையும் என்பதால், இந்த இடத்தில் தோண்ட வேண்டாம் என்று கூறியுள்ளோம். அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து தொல்லியல் துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.